அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Sat, Jul 01 2023 11:34 IST
Image Source: Google

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை பட்டியல் கடந்த வாரத்தில் உலகக் கோப்பைக்கு நூறு நாட்கள் இருக்கும் பொழுது வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது ஒன்பது லீக் ஆட்டங்களை 9 மைதானங்களுக்கு பறந்து பறந்து விளையாடுகிறது.

இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் 15 பேர் கொண்ட அணியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிக முக்கியமான இடம் இருக்கும். எனவே இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக யார் இடம் பெறுவார்கள் என்கின்ற பேச்சு தற்பொழுது எழுந்திருக்கிறது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவர் இருக்கிறார்கள். 

லெக் ஸ்பின்னர் ஆக சாகல் இருக்கிறார். சைனா மேன் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால் இந்தக் கூட்டணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் இல்லை. மேலும் தற்போதைய இந்திய அணியை எடுத்துக் கொண்டால் பகுதி நேர ஆப் பின்னரும் இல்லை. இதனால் தற்போதைய உலகக் கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் அளிக்க வேண்டுமா? என்பது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் உங்களுக்கு தற்காப்பு முறையில் இல்லாமல் தாக்குதல் முறையில் விக்கெட் எடுப்பதற்காக பந்து வீசுகிறார் என்றால் நீங்கள் அவரை அணியில் எடுக்கலாம். அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பந்து வீசுவதை நாம் சமீபத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் தற்காப்பாக வீசுகிறார். சாகல் போல எந்த நேரத்திலும் விக்கட் எடுக்கக் கூடியவராக அவர் இல்லை.

மேலும் நாம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறோம். நான் இதில் ஒரு விஷயத்தைப் புரிந்து வைத்திருக்கிறேன். அணியில் ஆல்ரவுண்டர் இருக்க வேண்டும் அவ்வளவுதான். அவர் ஒரு ஆட்டத்திற்கு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்க வேண்டும் என்பதை எல்லாம் கிடையாது.மேலும் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சராசரியாக இருப்பவர்களை விட, இரண்டில் ஒன்றில் பலமாக இருப்பவர்களை கொண்ட அணிகள்தான் உலகக் கோப்பைகளை வெற்றி பெற்று இருக்கின்றன. 

எனவே நாம் ஆல்ரவுண்டர்கள் குறித்து இதை இழந்து விடக்கூடாது. ஆல்ரவுண்டர்கள் வேண்டுமென்றால் இயல்பாக ஒரு பேட்ஸ்மேன் பந்து வீசுவார் என்றால் அவரை வைத்துக் கொள்ள வேண்டியதுதான். உதாரணமாக யுவராஜ் சிங், சைமன்ட்ஸ் போன்றவர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை