ஐஎல்டி20 2024: அரைசதமடித்து அசத்திய சாம் ஹைன், எவான்ஸ்; கேப்பிட்டல்ஸுக்கு 184 டார்கெட்!
இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு அலிஷான் ஷராஃபு - ஆண்ட்ரிஸ் கொஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கொஸ் 4 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய மைக்கேல் கைல் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான அலிஷான் ஷராஃபு 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சாம் ஹைன் - லௌரி எவான்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இருவரும் இணைந்து 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை வலிமைப்படுத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்கள் எடுத்த நிலையில் சாம் ஹைன் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லௌரி எவான்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.