ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் ஐஎல்டி20 லீக் தொடர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - வில் ஸ்மீத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஸ்மீத் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து முகமது வசீமும் 19 ரன்களுக்கும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 28 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - அம்பத்தி ராயூடு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் ராயுடு 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 41 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜேமி ஸ்மித் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோர்டன் காக்ஸும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து ஓரளவு தாக்குப்பிடித்த உஸ்மான் கான் 22 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் அடித்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில், ஜேமி ஓவர்டன், ஷிம்ரான் ஹெட்மையர், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி ஃபசல்ஹக் ஃபரூக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர்களைத் தொடர்ந்து கரிம் ஜானத், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுத்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News