ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Mon, Jan 29 2024 11:44 IST
Image Source: Google

ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 5 ரன்களிலும், சார்லஸ் 6 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த மார்ட்டின் கப்தில் - கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் காட்மோர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

பின் 39 ரன்களில் மார்ட்டின் கப்தில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 2 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 68 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய டென்லி 22 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. வைப்பர்ஸ் அணி தரப்பில் லுக் வுட், வநிந்து ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வைப்பர்ஸ் அணியில் கேப்டன் காலின் முன்ரோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக விளையாட, ஆடம் ஹோஸ் 11, வநிந்து ஹசரங்கா 6, ரோஹன் முஸ்தபா 14 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் தனது  அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அசாம் கான் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவிற 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை