ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - மைக்கேல் பெப்பர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் ஜோ கிளார்க் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மைக்கேல் பெப்பரும் 38 ரனில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த அலிஷான் ஷராஃபு - சாம் ஹைன் இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

இதில் ஷராஃபு 37 ரன்களிலும், சாம் ஹைன் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 சிக்சர்களை விளாசி 47 ரன்களை குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளை கைடந்தார்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய  மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்த குசால் பெரேரா விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரானும் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது வசீம் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 87 ரன்களையும், டிம் டேவிட் 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News