இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. அதிலும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனெனில் இத்தொடரில் அவர் தனது விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்தார். மேற்கொண்டு அவர் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 24, 14, 20 என மொத்தமாக 58 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் அவரின் பேட்டிங் குறித்த விவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், “இந்தத் தொடரில் நடைபெற்ற போட்டிகள் அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட கடினமான ஆடுகளத்தில் நடந்தது என்பதனை முதலில் ஒப்புக்கொள்வோம். அது விராட் கோலியாக இருந்தாலும் சரி, ரோஹித் சர்மாவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி. 10 முதல் 30 ஓவர்களில் இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
அதனால் இது குறித்து நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இதுபோல் மற்ற ஆடுகளங்கள் ஒன்றும் செயல்படபோவதில்லை. ஆனாலும் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துள்ளது. இங்கு நான் விராட் கோலியை பாதுகாப்பதற்காக எதனையும் கூறவில்லை. ஆனால் சுழற்பந்துவீச்சை விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.