IND vs AUS, 1st Test: சதமடித்து சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வருகிறார். முதலில் ஆடுகளம் பெரிய அளவில் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை. அந்த நிலையிலும் இந்திய அணி வீரர்கள் மோசமான ஷாட் தேர்வு மூலம் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தார்கள்.
இதில் கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா ரஞ்சி கிரிக்கெட் எல்லாம் விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் விளையாடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.விராட் கோலியும் சொற்ப ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இருப்பினும், ரோஹித் சர்மா மட்டும் தனி ஆளாக நின்று இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் ரோஹித் சர்மா 171 பந்துகளை எதிர் கொண்டு சதம் விளாசினார். இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அதாவது கேப்டனாக டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்திருக்கிறார்.
இந்த சாதனையை விராட் கோலி, தோனி ,சச்சின் கூட செய்ததில்லை. சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4ஆவது கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். மேலும் சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்று பெருமையையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
இதையடுத்து 212 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 120 ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித் சர்மாவின் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.