IND vs ENG: அடுத்தடுத்த போட்டிகளை தவறவிடும் ஜடேஜா, ஷமி; விராட், ரகுலின் நிலை என்ன?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் இந்திய அணி முதல் போட்டியை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் இப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலக, மற்றொரு நட்சத்திர வீரர் முகமது ஷமியும் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இதில் எந்தெந்த வீரர்கள் அடுத்த போட்டிக்கு அணியில் இடம்பெறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜாவின் காயம் தீவிரமாக இருப்பதால் அவரால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் பங்கேற்க இயலாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் மூன்றாவது போட்டியிலேயே அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிபட்ட காரணங்களினால் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், அவர் தற்போது இந்தியாவில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணியிலிருந்து வெளியேறிதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், அவர் எப்போது இந்தியா வருவார் என்ற சந்தேகங்களும் எழத்தொடங்கியுள்ளது. இதனால் மூன்றாவது டெஸ்டில் அவர் இணைவதும் சந்தேகமாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் காயம் காரணமாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டாததால், இங்கிலாந்து தொடரிலிருந்து அவர் முழுமையாக விலகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.