ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அதில் 14 மாதங்களுக்கு பின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
ரோஹித் சர்மா இல்லாத போது கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட மூவருமே காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்டோர் கம்பேக் கொடுத்துள்ளனர். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடிய இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டனர் என்று தெரியவில்லை.
அதிலும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் மட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் ஷிவம் துபே ஆஸ்திரேலியா டி20 தொடரில் விளையாடினார்.
ஆனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. தற்போது ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் இஷான் கிஷன் எங்கே? அவர் ஆஃப்கானிஸ்தான் விளையாட தயாராக இருந்தாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தேர்வு செய்யப்பட்டதன் மூலமாக அவர்கள் மீது நீண்ட நாட்களுக்கான திட்டம் இருப்பதை அறிய முடிவதாக தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் காயமடைந்த வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் போது ஷுப்மன் கில்லுக்கு தொடக்க வீரராக இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.