IND vs AUS, 1st ODI: ராகுல், ஜடேஜாவால் ஆஸியை வீழ்த்தியது இந்தியா!

Updated: Fri, Mar 17 2023 20:44 IST
IND vs AUS, 1st ODI: KL Rahul and Ravindra Jadeja take India home with an unbeaten century stand! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புத்திச்சாலித்தனமாக பந்து வீச்சு தேர்வு செய்தார். 

முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2ஆவது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர்.  ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். 

அதன்பின் லபுஷாக்னே 15 ரன்களில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சீட்டுக்கட்டாய் சரிந்தது. ஜோஷ் இங்லிஸ்(26), கேமரூன் க்ரீன்(12), ஸ்டோய்னிஸ்(5) ஆகிய மூவரும் ஷமியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 8 ரன்னுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழக்க, சீன் அபாட்(0) மற்றும் ஆடம் ஸாம்பா(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாக, 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

இதில், 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 59 பந்துகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் தந்தனர். இதில் இஷான் கிஷான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயேயும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 

அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 20 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 25 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ரவீந்திர ஜடேஜே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். நீண்ட காலமாக ஃபார்மில் இல்லாமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இக்கட்டான சூழலில் அவர் அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 75 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 45 ரகளையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

இதன்மூலம் இந்திய அணி 39.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை