IND vs AUS, 2nd ODI: அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸி; தொடரை வென்றது இந்தியா!

Updated: Sun, Sep 24 2023 22:09 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க சில நாள்களே உள்ள நிலையில், இத்தொடர் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி மொஹாலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து இணைந்த ஷுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டிய ஷுப்மன் கில்லும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ஷுப்மன் கில் தனது 6ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்தார். பின் 105 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயரும், 104 ரன்களில் ஷுப்மன் கில்லும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இவர்கள் இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் - இஷான் கிஷன் இணை சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக அதிரடியாக விளையாடி சூர்யகுமார் யாதவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின் 52 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 72 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்குய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 8 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும் என பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதன்பின் இணைந்த டேவிட் வார்னர் - மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இப்போட்டியில் 9 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அப்போது பந்துவீச அஸ்வின்  வந்ததையடுத்து, அவரை திசைத்திருப்பும் விதமாக டேவிட் வார்னர் வழக்கத்திற்கு மாறாக வலது கை பேட்டிங்கிற்கு மாறினார். ஆனால் அச்சவாலையும் திறம்பட கையாண்ட அஸ்வின் அந்த ஓவரில் 27 ரன்களை எடுத்திருந்த மார்னஸ் லபுஷாக்னேவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

அதனைத்தொடர்ந்து அஸ்வினின் அடுத்த ஓவரிலும் ஆட்டம் காட்டிய டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார் அஸ்வின். இதனையடுத்து வந்த அலெக்ஸ் கேரி 14 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 19 ரன்களுக்கும், ஆடம் ஸாம்பா 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சீன் அபேட் - ஜோஷ் ஹசில்வுட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் பவுண்டரி மழை பொழிந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த சீன் அபேட் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என தனது முதல் சர்வதேச ஒருநாள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இவர்கள் இருவரும் இணைந்து 9ஆவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 23 ரன்கள் எடுத்திருந்த ஜோஷ் ஹசில்வுட்டின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றி பார்ட்னர்ஷிப்பிற்கு முற்றுப்புள்ளிவைத்தார். அதற்கடுத்த ஓவரிலேயே 54 ரன்கள் எடுத்திருந்த சீன் அபேட்டின் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதனால் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை