IND vs AUS, 2nd T20I: கெய்க்வாட், ஜெய்ஷ்வால் அரைசதம்; ஆஸிக்கு 236 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்த நிலையில் கெய்வாட் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் தனது பங்கிற்கு சிக்சர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்வாட்டும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ருதுராஜ் கெய்வாட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.