IND vs AUS, 3rd Test: நாதன் லையன் சூழலில் சுருண்டது இந்தியா; எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா (12), சுப்மன் கில் (21), சட்டீஸ்வர் புஜாரா (1), விராட் கோலி (22), ரவீந்திர ஜடேஜா (4), ஷ்ரேயாஸ் ஐயர் (0), ஸ்ரீகர் பரத் (17), அக்ஷர் படேல் (12), உமேஷ் யாதவ் (17) என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் மேத்யூ குன்மேன் 5 விக்கெட் கைப்பற்றினார். நாதன் லயான் 3 விக்கெட்டும், டோட் முர்ஃபி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், டிரேவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா நிலைத்து நின்று ஆடி 60 ரன்கள் சேர்த்தார். மார்னஸ் லபுசாக்னே 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்னுடனும், கேமரூன் க்ரீன் 6 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் ஹேண்ட்ஸ்கோம்ப் 19 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், டாட் மர்ஃபி, நாதன் லையன் ஆகியோர் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 5 ரன்க்ளிலும், ரோஹித் சர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் ஒரு முனையில் சட்டேஷ்வர் புஜாரா நங்கூரம் போல் நின்று விக்கெட் இழப்பை தடுத்தார்.
ஆனால் ஒருமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயன்று 26 ரன்களிலும், அடுத்து வந்த கேஎஸ் பரத் 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் சட்டேஷ்வர் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். பின் அவரும் 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நாதன் லையன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 75 ரன்களை மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.