ஷுப்மன், ஸ்ரேயாஸ் திறமையின் மீது எங்களுக்கு சந்தேகம் கிடையாது - விக்ரம் ரத்தோர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.02) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் இளம் வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபார்மும் கேள்விக்குறியாக மாறிவருகிறது. ஏனெனில் இருவர்கள் இருவரும் கடந்த போட்டியில் விளையாடிய விதம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஷுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டாகியது பெரும் விவாதமாகவும் மாறியுள்ளது.
இதனால் இங்கிலாந்து எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து இருவரையும் கழட்டிவிட்டு புகமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்மொழியப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது விளையாட்டில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபமில்லாத இளம் பேட்டர்கள் உள்ளனர். அதில் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது விளையாட்டில் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்டர்கள் இனி வரும் போட்டிகளில் பெரிய ரன்களை எடுப்பார்கள். இதை நான் உறுதியாக நம்புகிறேன்.
அவர்களின் திறமையின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவர்கள் தங்களது ஃபார்மை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அதற்கான திட்டங்களை அவர்கள் கொண்டு வர வேண்டும். இருவரின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்கானித்து வருகிறோம். அவர்களிடமிருந்து கூடிய விரைவில் பெரிய இன்னிங்ஸ் வரும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.