IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்து அணி இந்தியா வந்து முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் என்ன கேட்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து பீல்டிங் தேர்வு செய்தார். இது சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாக காரணமாயிற்று. இதையடுத்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
முகமது ஷமி ஓவரில் பின் ஆலென் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், டேரில் மிட்செல் (1), டெவோன் கான்வே (7), டாம் லாதம் (1) என்று வரிசையாக வெளியேறினர். நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. இதே போன்று கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வந்த பிரேஸ்வெல் 22 ரன்னிலும், சான்ட்னர் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹென்றி சிப்லே 2, லக்கி பெர்குசன் 1 ரன் எடுக்க பிளேர் டிக்னர் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சில் முகமது ஷமி 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 3 விக்கெட் எடுத்து 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 6 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் உள்பட 2 விக்கெட் கைப்பற்றி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார். முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீ யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இது அவரது 48ஆவது ஒருநாள் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 51 ரன்களில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த இஷான் கிஷான் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடிக்க, மறுமுனையில் ஷுப்மன் கில் 40 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.