IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 99 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவிலுள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலில் களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன், டெவான் கான்வே தலா 11 ரன்களிலும், கிளென் பிலீப்ஸ் 5 ரன்களில் அடுத்தடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் 8 ரன்களிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் மைக்கேல் பிரேஸ்வெல் - மிட்செல் சாண்ட்னர் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்த பிரேஸ்வெல் 14 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய இஷ் சோதி மற்றும் லோக்கி ஃபெர்குசன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலெயே விக்கெட்டை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சாண்ட்னர் 20 ரன்களை எடுத்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.