IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!

Updated: Sat, Oct 26 2024 16:51 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்னிலும், வில் யங் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரான இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 76 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரச்சின் ரவீந்திராவும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும், டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் அதிரடியாக விளையாடிய மிட்செல் சாண்ட்னரும் 33 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தலா 30 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், அஸ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து இணைந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.

இதில் அதிரடியாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.  இறுதியில் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசிய நிலையில், மறுபக்கம் ஜஸ்பிரித் பும்ரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை  அமைத்து கொடுத்தர். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடி வந்த டெவான் கான்வே 17 ரன்களிலும், வில் யங் 23 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 9 ரன்களிலும், டேரில் மிட்செல் 18 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதமும் 86 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்திருந்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பிளெண்டல் மற்றும் பிலீப்ஸ் தொடர்ந்தனர். இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் பிளெண்ட 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மிட்செல் சாண்ட்னர், டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதில் கிளென் பிலீப்ஸ் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியில் ரோஹித் சர்மா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிப்மன் கில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ரன்கள் ஏதுமின்றி ரிஷப் பந்தும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களுக்கும், சர்ஃப்ராஸ் கான் 9 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களுக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களுக்கும், ஆகாஷ் தீப் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 42 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சான்ட்னர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சான்ட்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை