இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. 

Advertisement

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டனர்.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் விராட் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 131 ரன்களை குவித்தனர். 

அபாரமாக விளையாடி சதமடித்த ஷுப்மன் கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் 2ஆவது சதமாகும். கில்லை தொடர்ந்து அபாரமாக ஆடிய விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 46ஆவது சதம் இதுவாகும். சதத்திற்கு பின் காட்டடி அடித்தார் கோலி.

அதிலும், 43ஆவது ஓவரில் சதமடித்த கோலி, அதன்பின்னர் 66 ரன்களை குவித்தார். சதமடித்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார் கோலி. 110 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 166 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று சிறப்பாக இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். கோலியின் மெகா சதம் மற்றும் கில்லின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 390 ரன்களை குவித்த இந்திய அணி, 391 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு வில்லானாக அமைந்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இன்றைய போட்டியில் அவர் வீசிய முதல் 5 ஓவர்களில் இலங்கை அணியின் டாப் ஆர்டரை காலிசெய்ததார். அதன்படி அவிஷ்கா ஃபெர்ண்டாண்டோ, நுவனிந்து ஃபெர்னாண்டோ, குசால் மெண்டீஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோரது விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

அதன்பின் முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆக்கியோரும் தங்களது பங்கிற்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை அணி வெறும் 73 ரன்கலுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் ஒரு இலங்கை வீரர் கூட 20 ரன்களை எட்டவில்லை என்பது கூடுதல் தகவல்.

இதன்மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷும் செய்து அசத்தியது. அதுமட்டுமின்றி இப்போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்த முதல் அணி எனும் வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News