IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!

Updated: Sat, Feb 05 2022 14:29 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சைனி, அக்ஸர் படேல் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மயங்க் அகர்வால் அகமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் கிடைக்கலாம். யாரும் எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடலாம். 

விராட் கோலி செய்தவற்றை நான் அப்படியே தொடரப் போகிறேன். எல்லோருக்கும் அவரவருடைய பொறுப்புகள் தெரியும். நாளைய ஆட்டத்தில் இஷான் கிஷன் என்னுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவார். மயங்க் அகர்வால் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அணிக்கு வந்த வீரர்கள் அதிகமான ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவில்லை. சூழலுடன் தங்களைப் பொருந்திக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அடுத்த சில மாதங்களுக்குச் சில விஷயங்களைச் செய்து பார்ப்போம். அது சரியாக இல்லாவிட்டால் மாற்று திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை