உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா!

Updated: Fri, May 09 2025 22:33 IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா!
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூலம் 2027ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் தொடங்கவுள்ளது. அதன்படி இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

அதேசமயம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை என்றழைக்கப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு பதிப்பிலும் இறுதிப்போட்டியை இங்கிலாந்தின் ரோஸ் பௌல் மற்றும் ஓவல் மைதாங்களில் நடைபெற்றது. மேற்கொண்டு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான தேர்வில் ஐசிசி இறங்கியுள்ளது. ஏனெனில் இத்தொடரில் ஒவ்வொரு முறையும் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால், இம்முறை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் ஐசிசி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இத்தொடரின் 2027ஆம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Also Read: LIVE Cricket Score

அதற்கேற்றவகையில் எதிவரும் 2027ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்திய அணி ஏற்கெனவே இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் இரண்டு முறையும் தோல்வியைத் தழுவியது. ஒருவேளை இறுதிப்போட்டி இந்தியாவில் நடைபெறும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை