IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு!

Updated: Tue, Feb 20 2024 14:22 IST
IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு! (Image Source: Google)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது. 

இப்போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம், ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் ஆட்டத்தின் மூலமாகவும் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர். அதேசமயம், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் விளையாடியதுடன் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் துருப்புச்சீட்டாக இருந்தார். இந்நிலையில் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பணிச்சுமை காரணமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில் தசைப் பிடிப்பு காரணமாக 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கேஎல்ராகுல் முழு உடற்தகுதியை எட்டும் நிலையில் உள்ளதாகவும், இதன்மூலம் அவர், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் பட்டிதார் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏனெனில் கடந்த போட்டியின் இரு இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்த ராஜத் பட்டிதார், முதல் இன்னிங்ஸில் 5 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேமயம் கடந்த போட்டியில் அறிமுகமான சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ராஜத் பட்டிதாரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை