WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
Latest WTC Points Table: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. இதில் தற்சமயம் மூன்று பதிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதனையடுத்து 2025-27ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகின்றன. இந்த தொடர்களில் தற்போது வரையிலும் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் இங்கிலாந்து அணி 24 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Updated Points Table After ENG vs IND & WI vs AUS Test Matches