மகளிர் யு19 உலகக்கோப்பை: ஸ்வேதா செஹ்ராவத் மிரட்டல்; வெற்றியை தட்டிச்சென்றது இந்தியா!

Updated: Sat, Jan 14 2023 20:32 IST
India starts their U19 Women's World Cup campaign with a win! (Image Source: Google)

மகளிருக்கான அண்டர்19 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய யு19 மகளிர் அணி, தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிதது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ரேன்ஸ்பர்க் - சிமோன் லாரன்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரென்ஸ்பர்க் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சியோ முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த லாரன்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 61 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, பின்ன வந்த கைலா ரெய்னேகே 11, மேடிசன் லேண்ட்ஸ்மேன் 32, மெஸொ 19, மிலென் ஸ்மித் 16 என பங்களிப்பு செய்ய 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ஷஃபாலி வர்மா - ஸ்வேதா செஹ்ராவத் இணை ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். அதிலும் ஷஃபாலி வர்மா 16 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்வேதா அரைசதம் கடந்தார். ஆனால் அதபின் களமிறங்கிய கங்காடி த்ரிஷா 15, சௌமியா திவாரி 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, நின்று எதிரணி பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்த ஸ்வேதா செஹ்ராவத் 57 பந்துகளில் 20 பவுண்டரிகளை விளாசி 92 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் இந்திய யு19 மகளிர் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்வேதா செஹ்ராவத் 92 ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை