உலகக்கோப்பை தொடரில் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!

Updated: Mon, Oct 09 2023 12:30 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களது உலககோப்பை கணக்கை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து 165 ரன்கள் சேர்த்தனர். 

இதன் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 85 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவருடன் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய போட்டியில் மட்டும் விராட் கோலி ஐந்து சாதனைகள் படைத்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 12 வருட சாதனையையும் முறியடித்திருக்கிறார். ஐசிசி வெள்ளை பந்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அந்த சாதனையை விராட் கோலி முறியடித்து இருக்கிறார். இந்தியாவில் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் 61 போட்டிகளில் விளையாடி 2719 ரன்கள் எடுத்திருந்தார். 

இந்த சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்து இருக்கிறார் விராட் கோலி. இவர் 67 போட்டிகளில் விளையாடி 2780 ரன்கள் எடுத்து ஐசிசி வெள்ளை பந்து போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதில் 2 சதங்களும் 25 அரை சதங்களும் அடங்கும். மேலும் ஒரு நாள் போட்டிகளில் ரன் சேஸ் வெற்றி பெறுவதில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். 

இந்த சாதனையும் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கரின் வசம் இருந்தது. நேற்றைய போட்டியில் இந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் 124 போட்டிகளில் 5,490 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதே நேரம் விராட் கோலி 92 போட்டிகளில் விளையாடி 5517 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் மூலம் சேசிங்கின் போது அதிக ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியின் போது இலங்கை அணியின் லெஜென்டரி பேட்ஸ்மேன் குமார் சங்ககாராவின் சாதனையையும் முறியடித்துள்ளார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று அவர் எடுத்த 85 ரன்கள் மூலம் 50 பிளஸ் ரன்கள் எடுத்த ஓப்பனிங் இல்லாத பேட்ஸ்மேன் என்ற சாதனையை முறியடித்திருக்கிறார். இதற்கு முன்பு இலங்கை அணியின் குமார் சங்கக்கார 112 முறை 50 பிளஸ் ரன்கள் எடுத்திருந்தார். நேற்றைய போட்டியில் விராட் கோலி எடுத்த அரை சதத்தின் மூலம் 113 முறை 50 பிளஸ் ரன்கள் எடுத்து இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

மேலும் நேற்றைய போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கி வேகமாக 11 ஆயிரம் ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி விரைவாக 11 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்று சாதனையையும் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் எடுத்த அரை சதத்தின் மூலம் ஐசிசி உலகக் கோப்பை துவக்க போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இந்திய அணியின் துவக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் சதம் எடுத்தார். தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அரை சதத்தை எடுத்து இருப்பதன் மூலம் உலகக் கோப்பை தொடக்க போட்டிகளில் இரண்டு சதங்கள் ஒரு அரை சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை