மகளிர் யு19 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ஸ்வேதா, ஷஃபாலி ; இந்தியா அபார வெற்றி!

Updated: Mon, Jan 16 2023 17:15 IST
India's net run rate gets a boost with a huge win over UAE (Image Source: Google)

மகளிருக்கான அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீராங்கனைகள் ஸ்வேதா செஹ்ராவத் - கேப்டன் ஷஃபாலி வர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.

பின் ஷஃபாலி வர்மா 78 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் என 49 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே எஇழந்து 219 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியில் தீர்தா சதீஷ் 16 ரன்களிலும், லாவன்யா கெனி 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் மெஹிகா கவுர் மட்டும் நிலைத்து ஆடி 26 ரன்களைச் சேர்த்தார். மற்ற வீராங்கனைகளால் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 5 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை