இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்து விளையாடவுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரானது டிராவில் முடிந்தது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமிலும், 3ஆவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4ஆவது போட்டி மான்செஸ்டரிலும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இந்திய அணியும் மீண்டும் இங்கிலாந்தில் அந்த அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என்பதால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.