ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் விளாசிய ஷிவம் தூபே இப்போட்டியில் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்த ரிங்கு சிங் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்ம சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  அவருக்கு துணையாக விளையாடிய ரிங்கும் சிங்கும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 121 ரன்களையும், ரிங்கு சிங் 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 69 ரன்களையும் சேர்த்து மிரட்டினர். இதன்மூலம் 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக இருவரும் இணைந்து 190 ரன்களை குவித்தனர். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரர் ஃபரீத் அஹ்மத் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அரைசதம் ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் கடந்த கையோடு 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் கடந்த இப்ராஹிம் ஸத்ரானும், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 50 ரன்களை எடுத்த நிலையில் சஞ்சு சாம்சனின் அபாரமான கீப்பிங் திறமையால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் முதல் பந்திலேயே அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நைப் - முகமது நபி இணை அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசியதுடன் 18 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கொண்டு வந்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 34 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரிம் ஜானத் 2 ரன்களுக்கும், நஜிபுல்லா ஸத்ரான் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனால் கடைசி ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை முகேஷ் குமார் வீச ஆஃப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நப் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 53 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை சமன்செய்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றவது. 

Advertisement

சூப்பர் ஓவர்

ஆஃப்கானிஸ்தான் - இந்திய அணி தரப்பில் சூப்பர் ஓவரை முகேஷ் குமார் வீச, முதல் பந்தை சந்தித்த குல்பதின் நைப் இரண்டு ரன்கள் ஓட முற்பட்டு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 ரன்களையும், முகமது நபி 7 ரன்களையும் எடுக்க இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்தியா - இந்திய அணி தரப்பில் சூப்பர் ஓவரை எதிர்கொள்ள ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க, ஆஃப்கான் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை எடுக்க, மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை ரோஹித் சர்மா சிக்சருக்கு விளாச, கடைசி பந்திற்கு 2 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. அப்போது ரோஹித் சர்மா ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறி ரிங்கு சிங் களத்திற்கு வந்தார். ஆனால் கடைசி பந்தை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வல் அதில் சிங்கிள் மட்டுமே அடிக்க மீண்டும் ஸ்கோர் சமனானது. இதனால் ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றவது.  

Advertisement

இரண்டாவது சூப்பர் ஓவர்

 

இந்தியா - இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது சூப்பர் ஓவரை ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அஹ்மத் வீச, அதனை எதிர்கொண்ட ரோஹித் சர்மா முதலிரண்டு பந்துகளில் சிக்சரும், பவுண்டரியும் அடித்து மூன்றாவது பந்தில் ஒரு ரன்னை சேர்த்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் ரன் அவுட்டானார். இதனால் இந்திய அணி 12 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. 

Advertisement

ஆஃப்கானிஸ்தான் - இந்திய அணி தரப்பில் சூப்பர் ஓவரை ரவி பிஸ்னோய் வீச, அதனை எதிர்கொண்ட முகமது நபி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News