ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியளாரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் பவுண்டரிகளாக விளாசிய ஷஃபாலி வர்மா 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அனுபவ வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இப்போட்டியிலும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தீப்தி சர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரிசா கோஷ் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமன்ஜோத் கவுர் 17 ரன்களையும், பூஜா வஸ்திரேகர் சிக்சர் விளாசியும் ஃபினிஷிங் கொடுத்தனர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வர்ஹாம் தலா 2 விக்கெட்டுகளையும், மேகன் ஷாட், ஆஷ்லே கார்ட்னார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி  - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 85 ரன்களைச் சேர்த்தனர். இதில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த அலிசா ஹீலி 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தஹிலா மெக்ராத் 20 ரன்களிலும், எல்லிஸ் பெர்ரி முதல் பந்திலேயும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement

இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த  பெத் மூனி அரைசதம் கடந்து 52 ரன்களையும், ஃபோப் லிட்ச்ஃபீல் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News