ஐபிஎல் 2021: ஷிவம், ஜெய்ஸ்வால் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 101 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - எவின் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. இதில் லூயிஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
பின் 50 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் கேஎம் ஆசிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இதில் ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் 28 ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிலீப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் 17.3 ஓவர்களிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது.