ஐபிஎல் 2021: ஹர்சல் பட்டேல், டி வில்லியர்ஸ் அபாரம்; ஆர்சிபியிடம் பணிந்த மும்பை இந்தியன்ஸ்!

Updated: Fri, Apr 09 2021 23:34 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகமாகத் தொடங்கியது. இதில் இன்று தொடங்கிய முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, கிறிஸ் லின் இணை தொடக்கம் தந்தது. 

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 49 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து 31 ரன்களில் சூர்யகுமார் யாதவும் நடையைக் கட்டினார். பின்னர் வந்த வீரர்களும் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதில் ஹர்சல் பட்டேல் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஹர்சல் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடளமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர் இணை தொடக்கம் தந்தது. இதில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் ராஜட் படிதரும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலியும், 39 ரன்களில் மேக்ஸ்வெல்லும் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தின் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அப்போது களமிறங்கிய ‘மிஸ்டர் 360’ ஏபிடி வில்லியர்ஸ் அதிரயான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை வெற்றியுடன் தொடங்கியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை