ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஷிகர் தவான், பிரித்வி ஷா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 48 ரன்களையும், தவான் 43 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கு வகையில் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலும், கேப்டன் விராட் கோலி 4 ரன்களிலும் நோர்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரீகர் பரத் - ஏபிடி வில்லியர்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் வில்லியர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த பரத் அரைசதம் அடித்து அசத்தினார்.
பின் அவருடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாட ஆர்சிபியின் வெற்றி உறுதியானது. இதன் மூலம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஸ்ரீகர் பரத் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
இதன் மூலம் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரீகர் பரத் 78 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.