ஐபிஎல் 2022 தொடரில் பிராபோர்னில் இன்று நடைபெற்று வரும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இம்முறையும் கோலி- டு பிளசிஸ் இணை களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கோலி இரு பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தை ஆரவாரத்துடன் தொடங்கிவைத்தார்.

Advertisement

ஆனால் இந்த இணை 2ஆவது ஓவரை கூட தாண்ட முடியாமல் போனது சோகம். பிரதீப் சங்வான் வீசிய வேகப்பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் டு பிளசிஸ். முதல் நான்கு ஆட்டங்களில் 3 முறை அரைசதம் கடந்த ஆர்சிபியின் ஓப்பனிங் கூட்டணி, அடுத்த ஆறு ஆட்டங்களில் ஒரு முறை கூட 20 ரன்களை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ராஜத் படிதாருடன் கூட்டணி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.

Advertisement

விக்கெட் விழக்கூடாது என்ற நோக்கத்தில் கோலி ஒரு பக்கம் பொறுமையாக விளையாட, மறுபக்கம் கொஞ்சம் அதிரடி காட்டத் துவங்கினார் படிதர். அல்ஸாரி ஜோசம் வீசிய 5ஆவது ஓவரில் பவுண்டரிகளை இருவரும் விளாச, ஸ்கோர் உயரத் துவங்கியது. அதன் பின் இருவரும் பொறுமையாகவே விளையாடிய போதிலும், பெர்குசன் மற்றும் ஜோசப் வீசிய 10 மற்றும் 11வது ஓவரில் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அசத்தினர்.

மிகவும் பொறுமையாக விளையாடி வந்த கோலி 45 பந்துகளில் அரைசதம் விளாசினார். வெகு நாட்களுக்கு கோலியிடம் இருந்து ஒரு அரைசதம். மறுபக்கம் ராஜத் படிதாரும் பவுண்டரி விளாசிய படி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கி கொண்டிருந்த இந்த இணை அதை எட்டும் முன்பு 99வது ரன்னில் பிரிந்தது. சாங்வன் பந்துவீச்சில் படிதர் அவுட்டாகி வெளியேற, அடுத்தபடியாக ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி கோலியும் நடையைக் கட்டினார்.

மிகச் சரியாக டெத் ஓவரில் இணைந்த மேக்ஸ்வெல்-தினேஷ் கார்த்திக் கூட்டணி அபாரமாக விளையாடும் என எதிர்பார்த்த நிலையில், 2 ரன்னில் ரஷீத் கானிடம் சிக்கி கார்த்திக் வெளியேறினார். சிக்ஸர், பவுண்டரிகளாக மேக்ஸ்வெல் விளாசத் துவங்கிய போது 33 ரன்கள் குவித்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து வந்த மகிபால் லொம்ரோர் தன் பங்குக்கு இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு நடையைக் கட்ட, 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை குவித்தது ஆர்சிபி. 

இதையடுத்து இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி சஹா 29 ரன்களிலும், சுப்மன் கில் 31 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் வந்த சாய் சுதர்சன் 20, கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும் விக்கெட்டை இழக்க குஜராத் அணிக்கு நெருக்கடி நேர்ந்தது. இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - ராகுல் திவேத்தியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்லர் 39 ரன்களையும், திவேத்தியா 43 ரன்களையும் சேர்த்தனர். மேலும் ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 79 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News