ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: மத்வால் அபாரம்; லக்னோவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேடர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா இம்முறை சோபிக்காமல் 11 ரன்களிலேயே வெளியேறினார். இஷான் கிஷன் 15 ரன்களில் நடையைக் கட்ட அடுத்து பாட்னர்ஷிப் அமைத்த கேமரூன் கிரீன் - சூர்ய குமார் யாதவ் இணை லக்னோ பந்துவீச்சை விளாசித்தள்ளினர். இதன் எதிரொலியாக 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை 98 ரன்களைச் சேர்த்தது.
2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்த சூர்யகுமார் யாதவை நவீன் உல் ஹக் அவுட்டாக்க, தன்னுடைய பாட்னரை இழந்த சோகத்தில் கேமரூன் கிரீன் அதே ஓவரில் விக்கெட்டானார். அவர் 23 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்திருந்தார். அடுத்து ஒன்றிணைந்த திலக் வர்மா - டிம் டேவிட் இணை கடமைக்கு பொறுமையாக ஆடினர்.
ஆனால் அவர்களின் பொறுமையான ஆட்டத்துக்கு யாஷ் தாக்கூர் முற்றுப்புள்ளி வைக்க டிம் டேவிட் 13 ரன்களுடன் கிளம்பினார். அடுத்து திலக் வர்மா 26 ரன்களுடனும், கிறிஸ் ஜோடன் 4 ரன்னுடன் அவுட்டாக ஆட்டம் மந்தமானது. நேஹால் வதேரா கடைசி நேர நம்பிக்கையாக 2 சிக்சர்கள் விளாச கடைசி ஓவரில் அவுட்டானார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை 182 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் - மான்கட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மான்கட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான கைல் மேயர்ஸும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
அதன்பின் குர்னால் பாண்டியாவுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக சிக்சர் அடிக்க முயற்சித்த குர்னால் பாண்டியா 8 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஆயூஷ் பதோனி ஒரு ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கிருஷ்னப்பா கவுதமும் ரன் அவுட்டாகினார். பின் 15 ரன்களை சேர்த்திருந்த தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகிட லக்னோ அணியின் தோல்வியும் உறுதியானது.
அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல அவுட்டானது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆகஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.