ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏசிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Advertisement

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே சிறப்பாக தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து லக்னோவின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக ருதுராஜ் மிரட்டலில் சென்னை அணி பவர் ப்ளே முடிவில் 79 ரன்களைச் சேர்த்தது. இதில் 31 பந்துகளில் 57 ரன்களைச் சேர்த்த ருதுராஜை ரவி பிஷ்னோய் அவுட்டாக்கினார். அவர் போன வேகத்திலேயே அடுத்த ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை சேர்த்த கான்வேவும் கிளம்பினார். இதனால் 11 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 120 ரன்களை சேர்த்தது.

Advertisement

அடுத்து வந்த ஷிவம் தூபே 3 சிக்ஸ்களை அடித்து அதிரடி காட்டினாலும் நிலைக்காமல் 27 ரன்களுடன் நடையக்கட்டினார். அடுத்து மொயின் அலி 19 ரன்களிலும், பென்ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும், விக்கெட்டாக சிஎஸ்கேவிடம் தொடக்கத்திலிருந்த வேகம் குறையத்தொடங்கியது. அம்பதி ராயுடு கடைசி கட்ட ஓவர்களில் சிக்ஸர், ஃபோர் மூலமாக நம்பிக்கை கொடுக்க ரவிந்திர ஜடேஜா அவருக்கு பக்கபலமாக நின்றார். ஆனால் ஜடேஜா 3 ரன்களில் செல்ல தோனி என்ட்ரி கொடுத்தார். 

வந்த வேகத்தில் 2 பந்துகளையும் வானத்தில் பறக்கவிட்டார். 3வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று அது ரவி பிஷ்னோய் கைக்குள் ஐக்கியமானதால் தோனி பெவிலியன் பக்கம் திரும்பிச் சென்றார். இந்தப்போட்டியில் 12 ரன்களை எடுத்ததன் மூலம் தோனி ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்துள்ளார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. அம்பதி ராயுடு 27 ரன்களுடனும், மிட்ஷெல் சாட்னர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய், மார்க் உட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் தந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய கைல் மேயர்ஸ் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளினார். இதன் மூலம் 20 பந்துகளில் கைல் மேயர்ஸ் அரைசதம் கடக்க, லக்னோ அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைக் குவித்தது. 

அதன்பின் 22 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த மேயர்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 20 ரன்களிலும், குர்னால் பாண்டியா 9 ரன்களிலும் என அடுத்தடுத்து மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தது. பின் ஸ்டோய்னிஸ் 21 ரன்களிலும், அதிரடியாக விளையாடி 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை விளாசிய நிக்கோலஸ் பூரன் 32 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதமும் அதிரடியாக விளையாட ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. 

இருப்பினும் இறுதிவரை போராடிய லக்னோ அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் அபாரமாக பந்துவீசிய மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், துசார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News