ஐபிஎல் 2023: லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது குஜராத்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று குஜராத்தை பேட்டிங் செய்ய பணித்தது லக்னோ அணி.
இதனைத் தொடந்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த இணை லக்னோ பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டிரிகளாக விளாசினர்.
இதில் 43 பந்துகளில் சாஹா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கில் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இவர்களை தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 25 ரன்களும், மில்லர் 21 ரன்களும் சேர்க்க 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் - குயின்டன் டி காக் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 48 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, 11 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த டி காக்கும் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, குர்னால் பாண்டியா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மொஹித் சர்மா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியதுடன், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பினையும் உறுதிசெய்துள்ளது.