குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

Updated: Tue, May 23 2023 11:38 IST
IPL 2023 Qualifier 1 - Chennai Super Kings vs Gujarat Titans - Match Preview! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கள் நடைபெறவுள்ளன.  இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேசமயம் தோல்வியடையும் அணி இரண்டாவது குவாலிஃபைர் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும். ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது. 

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 10 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் மட்டுமே சந்தித்து வலிமைமிக்க அணியாக திகழ்கிறது.

அதே பலத்துடன் தற்போது பிளே ஆஃப் சுற்றையும் எட்டியுள்ள அணி நிச்சயம் தங்களது இரண்டாவது கோப்பைக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான் அகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, மோஹித் சர்மா, ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு எதிரணி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர். அவர்களுடன் யாஷ் தயாள், தசுன் ஷனகா, அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும் 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததுடன்,  5ஆவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதிலும் கேப்டன் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் சிஎஸ்கே மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து டாப் ஆர்டரில் அபாரமாக செயல்பட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். மிடில் ஆர்டரில் சிக்ஸர் தூபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களும் தங்களது ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங்  பலமும் அதிகரிகரிக்கும். பந்துவீச்சில் தீபக் சஹார், மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் உள்ளனர். இதில் பதிரானா, ஜடேஜா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அதிகளவில் ரன்களை வாரி வழங்குவதால் அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இரு அணிகளும் சமபலத்துடன் மோதவுள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா.

குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, தசுன் ஷனகா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை