NZ-W vs SA-W, WCWC 2025: நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

Advertisement

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் உள்ள ஹொல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் நட்சத்திர வீராங்கனை சூஸி பேட்ஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஜார்ஜிய பிளிம்மர் 31 ரன்களிலும், அமெலியா கெர் 23 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சோஃபி டிவைன் - புரூக் ஹாலிடே இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோஃபி டிவைன் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புரூக் ஹாலிடே 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதத்தை நெருங்கிய சோஃபி டிவைன் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தர்.

பின்னர் இணைந்த தஸ்மின் பிரிட்ஸ் - சுனே லூஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய தஸ்மின் பிரிட்ஸ் தன்னுடைய 7ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மறுபக்கம் சுனே லூஸும் அரைசதம் கடந்தார். இதில் இருவரும் இணைந்து 160 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், தஸ்மின் பிரிட்ஸ் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த மரிஸா கேப், அன்னெக் போஷ் ஆகியோரும் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுனே லூஸ் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 40.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி, நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியில் சதமடித்து அசத்திய தஸ்மின் பிரிட்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News