ஐபிஎல் 2023: விராட் கோலி மீண்டும் அரைசதம்; டெல்லிக்கு 175 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச தீரமானித்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை களமிறங்கியனர். வழக்கம்போல இந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 22 ரன்களில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆட்டமிழந்து ஏற்றமளித்தார்.
இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த மஹிபால் லம்ரோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 3ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு, லலித் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் களத்திற்கு வந்தது முதலே பவுண்டரிகளை விளாசத்தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 3 சிக்சர்களை விளாசி 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாம்ரோரும் 26 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்ஷல் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் போதிய ரன்களைச் சேர்க்கமால் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்பாஸ் அஹ்மத் - அனுஜ் ராவத் இணை கடைசி வரை களத்தில் நின்றதுடன், அணிக்கு வலுவான இலக்கை நிர்ணயிக்கவும் உதவியாக இருந்தனர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.