ஐபிஎல் 2023: ஜெய்ஷ்வால், ஜுரெல் காட்டடி; சிஎஸ்கேவிற்கு 203 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஷ்வால் பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்டு 24 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதேசமயம் மறுமுனையில் ஜோஸ் பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் 43 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 77 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையரும் வெறும் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து சோபிக்க தவறினார். இறுதியில் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் - துருவ் ஜுரெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரெல் 15 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் என 34 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டாகினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தேவ்தத் படிக்கல் 27 ரன்களைச் சேர்த்தார்.