ஐபிஎல் 2024: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சிஎஸ்கே!

Updated: Sun, May 12 2024 19:08 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். 

தொடக்கம் முதலே இருவரும் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினாலும், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் சிமர்ஜீத் சிங் பந்துவீச்சில் விக்கெடை இழந்தார். அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லரும் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிமர்ஜித்தின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணையும் நிதானமாக விளையாடி சிறுக சிறுக ரன்களைச் சேர்த்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களை மட்டுமே எதிருந்த நிலையில் சிமர்ஜித் சிங்கின் மூன்றாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த துருவ் ஜூரெல் களமிறங்கியது முதலே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு துணையாக ரியான் பராக்கும் ஒருசில பவுண்டரிகளை அடித்தார். 

இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த துருவு ஜூரெலும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபேவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ரச்சின் ரவீந்திரா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகளை அடித்த கையோடு 22 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, சிஎஸ்கே அணி 67 ரன்களில் 2ஆவது விக்கெட்டை இழந்தது. 

அதன்பின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒருமுனையில் நிதானமாக விளையாடி சிங்கிள்களை எடுக்க, மறுபக்கம் களமிறங்கிய மொயின் அலி 10 ரன்களுக்கும், அதிரடி வீரர் ஷிவம் தூபே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஃபீல்டர்களுக்கு இடையூறு ஏற்படுத்திதாக மூன்றாம் நடுவரால் அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 121 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 42 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய சமீர் ரிஸ்வி 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை