ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் - கேஎல் ராகுல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் குயின்டன் டி காக் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் ஆடினார். அதன் பயனாக ராகுல் சஹார் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் நிக்கலோஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்த நிலையில் குயின்டன் டி காக் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் வந்த குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய ஆயூஷ் பதோனி, ரவி பிஷ்னோய் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 102 ரன்களைச் சேர்த்திருந்தது. அப்போது லக்னோ அணி தரப்பில் அறிமுக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பந்துவீச வந்தார். 

தனது முதல் ஓவரிலேயே 150 கிமீ மேல் பந்துவீசி அசத்திய மயங்க் யாதவ் பஞ்சாப் அணியின் பேட்டர்களை தடுமாறவைத்தார். அப்போது அரைசத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் யாதவ் பந்துவீச்சில் ஸ்டொய்னிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்சகள் என 19 ரன்களுக்கும், பின்னர் வந்த ஜிதேஷ் சர்மா 6 ரன்களுக்கும் என மயங்க் யாதவின் அடுத்தடுத்த ஓவர்களில் நவீன் உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதன்மூலம் தனது அறிமுக போட்டியிலேயே மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் ஷிகர் தவான் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 70 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே சாம் கரண் ரன்கள் ஏதுமின்றி மொஹ்சின் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் 102-0 என்று இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 141-5 என மாறியது. அதன்பின் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் - ஷஷாங் சிங் ஆகியோரும் இறுதிவரை போராடினர். 

இதில் தனது காயத்தையும் பொறுட்படுத்தாத லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 28 ரன்களைக் குவித்தார். இருப்பினும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. லக்னோ அணி தரப்பில் அறிமுக வீரர் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஹ்சின் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியையும் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News