ஐபிஎல் 2024: தூபே, கெய்க்வாட் மிரட்டல்; தோனி அசத்தல் ஃபினிஷிங் - மும்பை இந்தியன்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கத்திற்கு மாறாக ரச்சின் ரவீந்திராவுடன் அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இந்த மாற்றம் சிஎஸ்கே அணிக்கு பெரிதளவில் எடுபடவில்லை. அஜிங்கியா ரஹானே 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ரச்சின் ரவீந்திரா, ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு 21 ரன்களில் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
அதன்பின் இருவரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து 27 பந்துகளில் ஷிவம் தூபேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களைத் தாண்டியது. பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, மறுபக்கம் ஷிவம் தூபே வழக்கம் போது அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 17 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசியதுடன், 4 பந்துகளில் 20 ரன்களை குவித்தார். மறுபக்கம் ஷிவம் தூபே 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது.