ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி!

Updated: Sun, Mar 24 2024 23:23 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட முயன்ற அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 12 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் அரைசதத்தை நெருங்கிய சாய் சுதர்சனும் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியா தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் சங்கர் 4 ரன்களையும், ரஷித் கான் 4 ரன்களையும் சேர்த்தனர்.  இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்துள்ளது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நமன் திர் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களைச் சேர்த்த நிலையில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - டெவால் ப்ரீவிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 77 ரன்களைச் சேர்த்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவால்ட் ப்ரீவிஸும் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொஹித் சர்மா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து அதிரடி வீரர்களான டிம் டேவிட் 11 ரன்களுக்கும், திலக் வர்மா 25 ரன்களுக்கும், ஜெரால்ட் கோட்ஸி ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க மும்பை அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது. 

இதனால் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீச அதனை எதிர்கொண்ட மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் பந்தை சிக்சருக்கும், இரண்டாவது பந்த பவுண்டரிக்கு விளாசி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன்பின் மூன்றாவது பந்தை கணிக்க தவறிய ஹர்திக் பாண்டியா அதனை சிக்சர் அடிக்க முயற்சித்து ராகுல் திவேத்தியாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே சேர்த்து. குஜராத் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை