ஐபிஎல் 2024: சிக்சர் மழை பொழிந்த நரைன், அங்கிரிஷ், ரஸல்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு இமாலய இலக்கு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிரத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து டெல்லி அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இன்னிங்ஸின் தொடக்கம் முதலே சுனில் நரைன் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ள மறுமுனையில் அவருக்கு துணையாக விளையாடி வந்த பில் சால்ட் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து நரைனுடன் இணைந்த அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் 88 ரன்களை குவித்தது. இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைசன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
பின்னர் நரைன் - ரகுவன்ஷி இருவரும் போட்டிப்போட்டு பவுண்டரியும் சிக்சர்களையும் விளாச 46 பந்துகளில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 85 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 சிக்சர்களுடன் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 28 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையில் இஷாந்த் சர்மாவின் அபாரமான யார்க்கர் மூலம் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறிய காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஆன்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், இஷந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.