101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின் ரஹானே - ஜடேஜா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இதில் ரஹானே 36 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜடேஜா - மொயீன் அலி கூட்டணி இணைந்து அடுத்த சில ஓவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் அதிரடியாக விளையாடிய மோயின் அலி, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து கையோடு 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக் இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் தோனி ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸரை விளாசி மிரளவைத்தார்.
அதனைத்தொடர்ந்து கடைசி ஓவரிலும் அபாரமன ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி அந்த ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 57 ரன்களும், கடைசி நேரத்தில் வந்த தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களையும் விளாசினர்.
இதனையடுத்து லக்னோ அணி இலக்கை நோக்கி விளையாடிவருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த சிக்ஸர் ஒன்று 101 மீட்டருக்கு பறந்தது. அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மகேந்திர சிங் தோனி மிட் விக்கெட் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார். அந்த சிக்ஸரானது 101 மீட்டருக்கு சென்றது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.