ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 168 ரன்களில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sun, Mar 24 2024 21:18 IST
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 168 ரன்களில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்! (Image Source: Google)

நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட முயன்ற அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 12 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதேசமயம் அரைசதத்தை நெருங்கிய சாய் சுதர்சனும் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியா தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் சங்கர் 4 ரன்களையும், ரஷித் கான் 4 ரன்களையும் சேர்த்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்துள்ளது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை