இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்றுவரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் வழக்கம் போல் அதிரடியாக தொடங்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் 2 சிக்சர்களை விளாசிய நிலையில் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய உள்ளூர் வீரரான தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக மார்கஸ் ஸ்டொய்னிஸும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24 ரன்களை விளாசிய நிலையில் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் மயங்க் தாகரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 81 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் பதோனியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இப்போட்டியில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதிலும் குறிப்பாக ரீஸ் டாப்லி ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களையும், முகமது சிராஜின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களையும் விளாசி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். 

இதன்மூலம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 40 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிளென் மேக்ஸ்வெல் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News