இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரி விளாசிய டி காக், மூன்றாவது பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் கடந்த போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மார்கஸ் ஸ்டொய்னிஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் லக்னோ அணி 11 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - தீபக் ஹுடா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் கேஎல் ராகுல் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடாவும் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களைச் சேர்த்திருந்த தீபக் ஹூடா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனும் 11 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 18 ரன்களையும், குர்னால் பாண்டியா 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழக்கம் போல் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் அதிரடியாக விளையாட முயன்ற ரியான் பராக் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 78 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்த துருவ் ஜூரெல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

இருவரும் இணைந்து தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து நடப்பு சீசனில் ஃபார்மின்றி தவித்து வந்த துருவ் ஜூரேலும் 31 பந்துகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதுமட்டுமின்றி சாம்சன் மற்றும் ஜூரேல் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 100 ரன்களையும் கடந்து அணியின் வெற்றியை எளிதாக்கினர். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 71 ரன்களையும், துருவ் ஜூரெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்த முதல் அணி எனும் பெருமையையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News