ஐபிஎல் 2024: சுனில் நரைன், ரகுவன்ஷியை பாராட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 84 ரன்களையும், இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கி நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், பிரிதிவி ஷா, மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த போது அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “நேர்மையாக சொல்ல வேண்டும் எனில் இப்போட்டியில் நாங்கள் முதலில் 210 அல்லது 220 ரன்கள் எடுப்போம் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் 270 ரன்கள் எடுப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போட்டிக்கு முன்னதாக சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறக்கி அதிரடியாக விளையாடுவதே மட்டுமே அவரது வேலை.
அவரால் முடியவில்லை என்றாலும் அதனை நாங்கள் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். இதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது. மேலும் எங்கள் அணியின் இளம் வீரர் அன்கிரிஷ் ரகுவான்ஷியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக அவர் முதல் பந்திலிருந்தே பயமின்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் எங்கள் அணியின் பந்துவீச்சும் இப்போட்டியில் சிறப்பாக இருந்தது.
இப்போட்டியில் ஹர்ஷ்தி ரானாவுக்கு என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியாது. நான் பார்க்கும் போது அவர் தனது தோல்பட்டையை பிடித்துக்கொண்டு பெவிலியன் திரும்பினார். இதற்கு முன் நானும் அச்சூழலில் இருந்துள்ளேன். ஆனால் அவர் இல்லாத குறையை வைபவ் அரோரா நீக்கினார். எங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றி இப்போட்டியின் வெற்றிக்கு உதவினார்” என்று தெரிவித்துள்ளார்.