17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ருதுராஜுடன் இணைந்த அஜிங்கியா ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே - ஷிவம் தூபே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிலும் குறிப்பாக ஷிவம் தூபே வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர்களை விளாசித்தள்ளினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை கடந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஜிங்கியா ரஹானேவும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரவீந்திரா ஜடேஜா - டேரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் டேரில் மிட்செல் 11 ரன்களை மட்டுமே எடுத்த ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர், நடராஜன், கம்மின்ஸ், ஷபாஸ் அஹ்மத், உனாத்கட் ஆகியொர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினார். அதிலும் இரண்டாவது ஓவரை முகேஷ் சௌத்ரீ வீச அதனை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா அந்த ஓவரில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை விளாசி மிரட்டினார். அதனைத் தொடர்ந்து தீபக் சஹார் ஓவரிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அபிஷேக் சர்மா 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 37 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த டிராவிஸ் ஹெட் - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவவென உயர்த்தினர். இதில் வழக்கத்திற்கு மாறாக நிதானம் காட்டிய டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ஐடன் மார்க்ரம் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 18 ரன்களில் ஷபாஸ் அஹ்மதும் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 10 ரன்களையும், நிதிஷ் ரெட்டி 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இப்போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மொயீன் அலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News